Newsroom

nepoleon son graduated defeating the muscular dystrophy

சோதனைகளை வென்று சாதித்தார் தனுஷ் நெப்போலியன்! பெருமிதத்தில் பெற்றோர்!!

முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் அமெரிக்காவில் அனிமேஷன் பிரிவில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட தனுஷுக்காக, தனது அரசியல் மற்றும் திரையுலக வாழ்க்கையை துறந்து அமெரிக்காவில் குடும்பத்தினரோடு குடியேறினார் நெப்போலியன். அங்கே ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருபவர், டென்னசி மாநிலத்தின் நேஷ்வில் நகரில் வசித்து வருகிறார்கள்

தாய், தந்தை, தம்பியின் ஆதரவுடன் உடல்ரீதியான சோதனைகளை கடந்து கல்வியில் சாதித்துள்ளார் தனுஷ். BA Animation ( Bachelor of Arts ) பட்டம் பெற்றுள்ள தனுஷுக்கு நண்பர்களும், உறவினர்களும், திரையுலக, அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

மகனின் பட்டமளிப்பு நிகழ்வைப் பார்த்த நெப்போலியனும் அவருடைய மனைவியும் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். “

என்ற திருக்குறளுக்கேற்ப நீங்காப்புகழை எங்களுக்கு தேடித்தந்து விட்டான் எங்கள் மூத்தமகன் தனுஷ் நெப்போலியன். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேதுமில்லை

நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக எங்கள் மூத்தமகன் தனுஷுக்காக எங்களது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டு அமெரிக்காவில் டென்னசி மாநிலத்தில் நேஷ்வில்லில் வாழ்வது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்..!

நேற்று எங்கள் மூத்தமகன் தனுஷ் பல்கலைகழகத்தின் BA Animation ( Bachelor of Arts )

என்ற 4 ஆண்டு கால பட்டம் பெற்றான். கடந்த 10 ஆண்டுகாலமாக இங்கு வந்து அதிக கவனம் செலுத்தி அவனது உடல்நலத்தையும் மனவலிமையையும் பேணிக் காத்ததினால், இங்கு இருக்கும் Sunset Middle School Ravewood High School போன்ற School-களில் பள்ளிப் படிப்பை முடித்து, Lipscomb University என்ற பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகால பட்டப்படிப்பையும் முடித்தான்.

கொரோனா என்ற கொடிய நோயினால் ( Covid19 ) உலகெங்கும் அதிக பாதிப்பு உள்ளதால் காணொலி மூலமாக வீட்டிலிருந்தே பட்டம் பெற்றான்.

நாங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் செயல் வடிவம் கிடைக்க அவன் அனைத்து திறமைகளையும் காட்டி, 1000 கணக்கான படங்களை வித்தியாசமாக, விதவிதமாக வரைந்து, கடினமாக உழைத்து, Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அவனது மிகப்போராட்டமான வாழ்க்கையையும் தாண்டி இறுதியில் சாதித்துக் காட்டிவிட்டான்!

தான் யார் என்று இவ்உலகிற்கு அவனை அடையாளம் காட்டி அவனது வாழ்வை வென்று காட்டிவிட்டான்!! இன்னும் பல சாதனைகளைச் செய்திட அவனுக்கு ஒரு உந்துதலை தந்திட , வளமுடனும் உடல் நலமுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திட, எல்லோருடைய வாழ்த்துக்கள் கிடைத்திட இந்த மகிழ்வான தருணத்தை உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச்சொந்தங்களோடு அன்போடு பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.” என்று உணர்ச்சி தளும்ப தெரிவித்துள்ளார் நெப்போலியன்.

நெப்போலியன் மனைவி ஜெயசுதாவும், இளைய மகன் குணாலும், தனுஷின் பட்டமளிப்பு நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து விட்டனர். குடும்பத்தில் புதிய உற்சாகமும் குடி கொண்டுள்ளது.

©2024 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies